ஸபிய்யா பின்து ஹுயைய் (ரலி) : صفية بنت حيي
நபி ஹாரூன் (அலை) அவர்களின் வழித்தோன்றலில் வந்த ஹுயைய் பின் அஹ்தப் என்ற யூதத் தலைவரின் புதல்விதான் அன்னை ஸபிய்யா (ரலி) அவர்கள். ஏற்கனவே இரண்டு கணவர்களுக்கு வாழ்கைப்பட்ட அன்னையவர்களின் இரண்டாவது கணவர் கைபர் போரின் போது கொல்லப்பட்டு முஸ்லிம்களிடம் அன்னையவர்கள் சிறைப்பட்டார்கள். அன்னையவர்கள் திஹ்யதுல் கல்பி என்ற நபித்தோழரின் பங்குக்கு வந்து சேர்ந்தார்கள். அன்னையின் கௌரவம் பற்றி சில நபித்தோழர்கள் நபியவர்களிடம் கூறி அவர்கள் நபிக்கு மாத்திரம்தான் பொருந்தும் என்று ஆலோசனை வழங்கியபோது நபியவர்கள் அன்னையரை உரிமையிட்டு திருமணம் செய்துகொண்டார்கள். இது ஹிஜ்ரி 7ம் ஆண்டு இடம்பெற்றது.
ஒருமுறை அன்னை ஸபிய்யா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும் போது இரவு நேரத்தில் அவர்களுடன் கதைக்க வந்தார்கள். அதை இரு அன்ஸாரித் தோழர்கள் கண்டார்கள். உடனே நபியவர்கள் அவர்களிருவரிடமும் சென்று இது ஸபிய்யா என்று சந்தேகப் படுமுன் தெளிவுபடுத்தினார்கள்.
உஸ்மான் (ரலி) அவர்கள் முற்றுகையிடப்பட்ட போது தமது வீட்டிலிருந்து உணவுபாணங்கள் அனுப்பி கலீபாவிற்கு அன்னையவர்கள் உதவினார்கள். ஹிஜ்ரி 50ம் ஆண்டு முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சிக்காலத்தில் மதீனாவில் அன்னையவர்கள் மரணித்து ஜன்னதுல் பகீஃஇல் அடக்கம் செய்யப்பட்டார்கள். நபியவர்களைத் தொட்டும் அன்னையவர்கள் 10 நபிமொழிகளை அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக்கொள்வானாக.